எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு மே 6-ம் தேதி நடக்கிறது மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் தகவல் | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் உள்ளன. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET – நீட்) தகுதி பெறும் மாணவர்களைக் கொண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் www.cbseneet.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்படும். அதன்பின்னர் மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று மத்திய பாடத்திட்ட மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஒரே பாடத்திட்டம் அதேநேரத்தில் நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டங்களை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், 2017-ம் ஆண்டில் நடந்த நீட் தேர்வில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்பட்டதோ, அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டு நீட் தேர்விலும் பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.