தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை – ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், 2021 மற்றும் 22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் அதில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் பேர் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1,125 மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 புதிய மாணவர்களை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்த அமைச்சர், இதேபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்களை அணுகி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
2021 மற்றும் 22ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அரசின் கல்வி மேலாண் தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவேற்றம செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஆணையிட்டார்.