பெங்களூரு: கொரோனா பரவலுக்கிடையிலும், ‘மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையின்படி, வரும் 23ல் இருந்து 9, 10 மற்றும் பி.யு.சி., வகுப்புகளை ஆரம்பிக்கப்படும்,’ என, கர்நாடக முதல்வர் பொம்மை நேற்று அறிவித்தார்.
கர்நாடகாவில், கொரோனாவால் 2020 பிப்ரவரியிலேயே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடம் எடுக்கப்பட்டன. தொற்று பரவல் ஓரளவு குறைந்த பின், உயர்நிலைப்பள்ளிகள் துவங்கியது முதல், படிப்படியாக பிற வகுப்புகளும் துவக்கப்பட்டன.
ஆலோசனை
ஆனால், கொரோனா இரண்டாம் அலை துவங்கியதால் மீண்டும், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் திறக்க பலரும் வலியுறுத்தினர்.
பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கும்படி, தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தன. இந்நிலையில், பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில், மருத்துவ வல்லுனர்கள், கல்வி நிபுணர்களுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் அஸ்வத் நாராயணா, சுதாகர், மருத்துவ நிபுணர்கள் மஞ்சுநாத், தேவிஷெட்டி பிரசாத், சுதர்சன், மாநில தலைமை செயலர் ரவிகுமார் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வல்லுனர்கள் அவரவர் கருத்துகளை தெரிவித்தனர்.
அறிக்கை
இறுதியில், வரும், 23 முதல், 9, 10, மற்றும் பி.யு.சி., வகுப்புகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. அதுவும், ஒரு நாள் விட்டு, மறுநாள் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. எட்டாம் வகுப்பு ஆரம்பிப்பது குறித்து, இம்மாத இறுதியில் கொரோனா சூழ்நிலை ஆராய்ந்து, முடிவு எடுக்கப்படவுள்ளன.
இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனையின்படி, ஆக., 23 லிருந்து, 9ம் வகுப்பு முதல், பி.யு.சி., வரையிலான வகுப்புகள் திறக்கப்படும். பள்ளி களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, சுகாதார துறை சார்பில் தனியாக அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விவாதம்
கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான கேரளா, மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இங்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், நம் மாநில நிலைமை என்னவாகுமோ என்று பலரும் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவரா என்பதும் விவாதத்திற்கு உரியதாகவே மாறியுள்ளது.