கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்த ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணங்கள் மூன்று தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது:
1. கல்விக்கடன் ரத்து: பெற்றோர் ஆண்டு வருமானம் 125,000 அமெரிக்க டாலருக்கு குறைவாக உள்ள பெல் உதவித்தொகை மாணவர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர் அளவு கடன் தள்ளுபடி செய்யப்படும் (இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம்) என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
அதே போன்று, இதே ஆண்டு வருமானத்திற்குள் பெல் உதவித் தொகை திட்டத்தின் கீழ் வராத மாணவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வரை கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க உயர்கல்வியில் Pell Grant (பெல் உதவித் தொகை) திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டமானது, மேல்நிலைக்க்குப் பிந்தைய உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்காக 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பெற்றோர் ஆண்டு வருமானம் 60,000 அமெரிக்க டாலர் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க உயர்கல்வி வணிகமயமாகி வருவதால், கல்வி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெல் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்கள் பெரும்பாலும் கல்வி கடன்களை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
தற்போது, கல்விக்கடன்கள் உள்ள மாணவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் பெல் திட்ட பயனாளிகள் என்று புள்ளி விவரங்களை சுட்டிக் காட்டியுள்ளது.
2. கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் தளர்வுகள்: இந்த நிவாரண அறிவிப்பின் கீழ், கடன் தவணைகளைத் திருப்பி செலுத்த நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர தொகை, கடன் பெற்ற மாணவரின் மாதாந்திர வருமானத்தில் 5%க்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
3. பொது சேவையில் உள்ள மாணவர்களின் கல்விக்கடன் ரத்து திட்டம்: (Public Service Loan Forgiveness Scheme)
பொதுச் சேவையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மாணவர்களுக்கு கல்வி கடன்களை ரத்து செய்யும் திட்டம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை ஜோ பைடன் தற்போது முறைப்படுத்தியுள்ளார். மேலும், இந்த நிவாரந் நிவாரணத் தொகுப்பின் மூலம் 4 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது