
தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று துவங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்த 50-க்கும் மேற்பட்ட தொழிற் நிறுவனங்களுடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி,பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் தனித் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி வைத்தார். ஆண்டுக்கு, 10 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில்,சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது இட்த்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை திட்டத்தினை ஒருங்கிணைக்கும் , மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தினை செயல்படுத்தும்.
திறன் மேம்பாட்டு, வழிகாட்டி ஆகிய இரண்டு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது. 12ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டும் naanmudhalvan.tnschools.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டது. மேலும், துறைசார் நிபுணர்கள், வழிகாட்டிகள் மூலம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென இணைய வழி அமர்வுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.