
திவாலுக்கு விண்ணப்பித்தது ஏர்செல் | நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல், திவாலுக்கு விண்ணப்பித்திருக்கிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) விண்ணப்பித்திருக்கிறது. ஏர்செல்லின் நிறுவனரான மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் கூடுதல் தொகையை முதலீடு செய்ய மறுத்துவிட்டது. 4ஜி சேவை தொடங்குவது உள்ளிட்ட பல வாய்ப்புகளை நிறுவனம் பரிசீலித்தாலும் கூடுதல் முதலீடு இல்லாததால் என்சிஎல்டியிடம் விண்ணப்பித்திருக்கிறது. என்சிஎல்டி-க்கு விண்ணப்பித்தாலே சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கை என எடுத்துக்கொள்ள தேவையில்லை. தற்போதைய சூழலில் இருப்பதில் சிறப்பான வாய்ப்புகளை கண்டறிவதற்கான நடவடிக்கை என்றும் ஏர்செல் கூறியிருக்கிறது. முன்னதாக மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஏர்செல்லில் கூடுதலாக முதலீடு செய்யப்போவதில்லை என கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. திவாலுக்கு விண்ணப்பிப்பற்கு ஏர்செல் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. புதிய நிறுவனத்தால் உருவான போட்டி, ஒழுங்குமுறை சார்ந்த மாற்றங்கள், அதிக கடன் மற்றும் நஷ்டம் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களால் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை என நிறுவனம் கூறியிருக்கிறது. 2016-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு தொடங்கியது. நிறுவனத்தை மற்ற நிறுவனத்துடன் இணைப்பதற்கான பணியை தொடங்கினோம். ஆனால் பல காரணங்களால் இந்த இணைப்பு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில் இணைப்பு பேச்சு வார்த்தை கைவிடப்பட்டது. நிறுவனத்துக்கு இருக்கும் கடனையும் மறு சீரமைப்பு செய்வதிலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. பிப்ரவரி 12-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவின் மூலம் வங்கிகள் நேரடியாக கடனை மறுசீரமைப்பு செய்ய முடியாது. அதனால் திவாலுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். நிறுவனத்தின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கை அல்ல. எங்களுடன் வர்த்தக உறவு வைத்திருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், பணியாளர்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்ற முடிவை எடுப்பதற்காக விண்ணப்பித்திருக்கிறோம் என ஏர்செல் கூறியிருக்கிறது. இதனை தொடர்ந்து தீர்வினை உருவாக்க குழு அமைக்கப்படும். 270 நாட்களுக்குள் தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லை எனில் நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் பணி தொடங்கும். எஸ்பிஐ, சீனா மேம்பாட்டு வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் அனைத்தும் சேர்ந்து ரூ.15,500 கோடி அளவுக்கு கடன் வழங்கி இருக்கின்றன. ஏர்செல் நிறுவனத்தில் மேக்ஸிஸ் 74 சதவீதமும், சிந்தியா செக்யுரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 26 % பங்குகளையும் வைத்திருக்கிறது. மீண்டும் சேவை பாதிக்கும் ஏர்செல் சேவை பாதிக்கப்படும் என நேற்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக ஏர்செல் தமிழகத்தின் சில பகுதிகளில் சீரடைந்தது. சென்னை உள்ளிட்ட இடங்களில் சில சமயங்களில் ஏர்செல் இணைப்பு கிடைத்தும், சில நேரங்களில் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏர்செல் இணைப்பு மீண்டும் பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியள்ளது. இதுகுறித்து ஏர்செல் நிறுவனத்தின் தமிழக பிரிவு தலைவர் சங்கரநாராயணன் கூறியதாவது: “ஏர்செல் நிறுவனத்தின் சேவை இன்று மீண்டும் பாதிக்கப்படும். எனவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.