புதுடில்லி: கொரோனா வைரஸ் காலத்தில் நாடு முழுதும் தனியார் பள்ளிகளுக்கு 20 – 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இரண்டாவது அலைகொரோனா வைரஸ் பரவலால் கடந்தாண்டு மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இரண்டாவது அலையால் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகளாக பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறப்படவில்லை.
இந்நிலையில், ‘சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன்’ என்ற, பள்ளி கல்வி தரம் குறித்து ஆய்வு செய்யும் அரசு சாரா அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதில் தெரிய வந்துள்ளதாவது:
நாடு முழுதும் 20 மாநிலங்களில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி தனியார் பள்ளிகளுக்கு 20 – 50 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற செலவினங்களை குறைக்க முடியாத நிலையில் ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 55 சதவீத ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.இதில் 54 சதவீத ஆசிரியர்கள் வருமானத்துக்கு வேறு வழியில்லாமல் திணறுகின்றனர். அதே நேரத்தில் 30 சதவீத ஆசிரியர்கள் ‘டியூஷன்’ நடத்தி குடும்பத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
குறைக்கப்படவில்லை
நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை பெரிய அளவில் குறைந்து உள்ளதாக 55 சதவீத பள்ளி கள் தெரிவித்துள்ளன. ‘நிதி நிலைமையை சமாளிக்க கடன் வாங்கும் யோசனை இல்லை’ என, 77 சதவீத பள்ளிகள் கூறியுள்ளன. 3 சதவீத பள்ளிகளே, வங்கிகளில் கடன் வாங்கியுள்ளன. மேலும், 5 சதவீத பள்ளிகளின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளன.
பெற்றோரில் 70 சதவீதம் பேர் கல்விக் கட்டணம் முந்தைய ஆண்டைப் போலவே உள்ளதாகவும், குறைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். பெற்றோரில் 50 சதவீதம் பேர் மட்டுமே கல்விக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக 25 சதவீத பெற்றோர் கூறியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளால் செலவுகள் அதிகரித்துள்ளதாக பெற்றோர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.