
கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | கோடை வெயிலை பொறுத்து பள்ளிக்கூடங் களுக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்படுமா? என்பது பற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோடை விடுமுறை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும், ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் வறட்சி திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ஆயத்தமாக உள்ளோம். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிக்கூடங்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தால், முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நூலகர்கள் வேலைநிறுத்தம் நூலகத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக நூலகத்துறை இயக்குனர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசு தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அரசாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். பாடத்திட்டம் மேலும், ‘தனியார் பள்ளிக்கூடங்களில் மழலையர்களுக்கு உள்ள பிரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. பாடத்திட்டங்களை போல், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் கொண்டு வரப்படுமா’? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர், ‘இப்போதுதான் முதல் முறையாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதில் அளித்தார்.