சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.
அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி இன்றைய தினம் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது.
தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த அரசாணையின் விளைவாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.