தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்விற்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. அதன்படி விழுப்புரத்தில் உள்ள காமராஜர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்று வரும் அரசு அலுவலர்களுக்கான துறை தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. இந்த துறை தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் மே மாதம் 4,5 6 ஆகிய தேதிகளில் டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு திட்டமிட்டபடி நடைப்பெறும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைப்பெற உள்ள அதே நாட்களில் யுபிஎஸ்சி வனத்துறை அதிகாரிக்கான தேர்வு நடைப்பெறுவதால் குரூப் 1 தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் ஆய்வு நடத்தியதில் யுபிஎஸ்சி தேர்வில் 2 நபர்கள் மட்டுமே எழுதுகிறார்கள். அதற்கான குரூப் 1 தேர்வை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, திட்டமிட்டபடி குரூப் 1 தேர்வு நடைப்பெறும்.
டிஎன்பிஎஸ்பி குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வு தேதிகள் இம்மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அதேப் போல் டிஎன்பிஎஸ்பி குரூப் 4 தேர்வு தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும். தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைப்பெறும். இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைப்பெறும் கால நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை காலையில் 10 மணி தொடங்கி 1 மணி வரை நடைப்பெற்று வந்த தேர்வுகள், இனிமேல் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைப்பெறும், மாலை தேர்வுகள் வழக்கம் போல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைப்பெறும்.
தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு கூட நுழைவு கதவுகள் பூட்டப்படும். எனவே தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே தேர்வர்கள் வந்துவிட வேண்டும். அதற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 32 வகையான தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.