
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு | தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பேற்றார். கடந்த ஓராண்டாக அவர், தமிழக பொறுப்பு ஆளுநராக பணியாற்றி வந்தார். தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில், நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, அசாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். நேற்று முன்தினம் சென்னை வந்த பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர் முன்னதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேற்று முன்தினம் காலை விடைபெற்றுச் சென்றார். இதைத் தொடர்ந்து, புதிய ஆளுநர் பதவியேற்பு விழா, நேற்று காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது. விழாவுக்காக ஆளுநர் மாளிகையின் புதிய தர்பார் அரங்கத்தின் அருகில் உள்ள புல்தரை பகுதியில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டிருந்தது. காலை 9.05 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். 9.19 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமியும் அவரைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் வந்தனர். அதன்பின் ஆளுநர் மாளிகையில் இருந்த பன்வாரிலால் புரோஹித், விழா மேடைக்கு வந்தார். அவரை ஆளுநராக பதவியேற்க வருமாறு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அழைத்தார். 9.35 மணிக்கு, தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். அவருக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் அமைச்சர்களை ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து, அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், மத் திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்பி இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், திமுக நிர்வாகிகள் பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், மாநிலங்களவை எம்.பி.,ஆர்.எஸ்.பாரதி, ஆளுநரின் மனைவி புஷ்பா புரோஹித் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளிப்படையான நிர்வாகம் எந்த முடிவுகளையும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, அரசியல் சார்பின்றி எடுப்பேன் என்று தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் உறுதியளித்துள்ளார். பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு பன்வாரிலால் புரோஹித் தேனீர் விருந்து அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆளுநராக நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும், அரசியலமைப்பு சட்டம் என்ன கூறியுள்ளதோ அதன்படிதான் இருக்கும். அதே நேரம் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், காப்பாற்றவும் முடிவு செய்துள்ளேன். நான் எடுக்கும் எந்த பெரிய, சிறிய முடிவுகளும் அரசியல் சார்பற்றதாக, நியாயத்தின் அடிப்படையில் இருக்கும். ஆளுநர் மாளிகையும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசுக்கு ஆதரவாக இருப்பேன். எனக்கு மத்திய அரசிலும், அமைச்சர்களிலும் நண்பர்கள் இருக்கின்றனர். இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு துறைகள் வளர உறுதுணையாக இருப்பேன். மேலும், தமிழகத்துக்கு கூடுதல் நிதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவேன். தமிழக சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.