நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து கல்வி அதிகாரிகளிடம் இணை இயக்குனர் (தொழில்நுட்ப கல்வி) சுகன்யா விசாரணை நடத்தினார்.
அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2017ல் 34 ஆசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் தொடக்கப்பள்ளி – 9, பள்ளிக் கல்வி – 6, மெட்ரிக் – 1, டையட் – 1 என மொத்தம் 17 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
இதில், ‘தகுதி இல்லாத சிலரை தேர்வுக் குழு முறைகேடாக பரிந்துரை செய்ததால், தகுதி உள்ள பலர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்,’ என கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ்விற்கு பாதிக்கப்பட்டோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த இணை இயக்குனர் சுகன்யாவிற்கு உத்தரவிடப்பட்டது.
இதன்பேரில், மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினார். விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல், எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து தேர்வு குழுத் தலைவரான சி.இ.ஓ., மாரி முத்துவிடம் விசாரித்தார். மேலும் தேர்வுக் குழு உறுப்பினர்களான டி.இ.ஓ.,க்களிடம், கேள்விகள் இடம் பெற்ற படிவங்கள் கொடுத்து, அதற்கான பதில்களையும் பெற்றார்.
அலுவலர்களிடமும் விசாரணை நடந்தது.இதுகுறித்து சுகன்யா கூறுகையில், “மதுரையில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது தொடர்பாக, ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் விபரம் தெரிவிக்க முடியாது. விசாரணை இன்னும் முழுமையாக முடியவில்லை,” என்றார். ஆனால் சி.இ.ஓ., மாரி முத்துவிடம் கேட்ட போது, “புகார் குறித்து விசாரிக்க இணை இயக்குனர் மதுரைக்கு வரவில்லை. கல்வி விழாவில் பங்கேற்க வந்தார்,” என்றார்.