தேர்வு பணிகள் பாதிக்காத வகையில், சென்னையில் நடக்கும் தொடர் மறியலில் பங்கேற்க ஜாக்டோ- ஜியோ முடிவு செய்துஉள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,
 மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரியும் 2017 செப்., 7 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். நீதிமன்றம் உத்தரவால் போராட்டத்தை கைவிட்டனர். ‘வல்லுனர் குழு அறிக்கை 2017 நவ., 30க்குள் சமர்ப்பிக்கப்படும்’ என அரசு உறுதி அளித்தது.

ஆனால், அறிக்கை தாக்கல் செய்ய ஐந்து முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அடுத்தகட்ட போராட்டம்குறித்து ஆலோசிக்க ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பிப்., 21 முதல் சென்னையில் தொடர் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.’பிப்ரவரி இறுதிக்குள் முடிவு ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்’ என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக்ரெய்மண்ட் தெரிவித்தார்.