பெங்களூரு: சுழற்சி முறையில் ஆகஸ்ட் முதல், பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பது குறித்து திட்டமிடுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதல்படி, கல்வித்துறையைச் சேர்ந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிகள் திறக்கப்படுவதால் எதிர்கொள்ள வேண்டிய பாதிப்புகள், தடுப்பு முறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குழுவின் மூலம் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் மாநில அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.
இந்த குழுவில், கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, சுகாதாரத்துறையினர், குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் உள்ளனர்.குழுவின் முடிவுபடி, முதற்கட்டமாக, எட்டாம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளை துவக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆக., முதல் வாரம் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. பெற்றோர், ஆசிரியர்களும் தடுப்பூசி போடுவதற்கு குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.