அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி திட்டம் செயல்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட 1,880 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு 2019ம் ஆண்டு மார்ச் வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதுதொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை தர ஆணை வழங்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் அரசைக் கேட்டுள்ளார். அதையேற்று 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.