தனியார் பல்கலை பேராசிரியர் ஒருவர் தற்கொலை
எதிரொலியாக, அசல் சான்றிதழ்களை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் திருப்பி தர, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது
தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி தகுதிக்கான, அசல் சான்றிதழ்களை, நிர்வாகங்கள் வாங்கி வைத்து கொள்கின்றன. சென்னையைச் சேர்ந்த, தனியார் பல்கலை பேராசிரியர், அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில் பணிக்கு சேர்ந்தார். அவருக்கு, தனியார் பல்கலையில் இருந்து, அசல் சான்றி தழ் கிடைக்கவில்லை.இதனால், மனம் உடைந்த அவர், தற்கொலை செய்தார். இந்த பிரச்னை, நீதிமன்றத்திற்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கும் சென்றுள்ளது.இதையடுத்து, அனைத்து பல்கலைகளும், கல்லுாரி களும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:பல பல்கலைகளும், கல்லுாரிகளும், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்து, வேறு வேலைக்கு செல்ல முடியாமல் தடுக்கின்றன.
அதனால், சிறந்த பணிகளுக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றனர். சான்றிதழ் கிடைக்காத அதிர்ச்சியில், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது; இது, மிகவும் வருந்தத்தக்கது.எனவே, எந்த பல்கலையும், கல்லுாரியும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின், அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்க கூடாது. வாங்கி வைத்திருந்தால், உடனடியாக திருப்பி தர வேண்டும். இதுகுறித்து, புகார்கள் வந்தால், கல்வி நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.