நடப்பாண்டில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது பெருமளவில் குறைந்துள்ளது.
இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 505 பேரும், மிகக் குறைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்பது பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 133 மாணவர்களும், செங்கல்பட்டில் 86 மாணவர்களும், திருவள்ளுர் மாவட்டத்தில் 99 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மொத்தம் 4,338 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். ஆதிதிராவிட மாணவர்கள் ஆயிரத்து 850 பேரும், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 129 பேரும், பழங்குடியின மாணவர்கள் 95 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 19 ஆயிரத்து 680 பேர் நீட் தேர்வெழுத பதிவு செய்தனர், கடந்த 2019 20 ஆம் கல்வி ஆண்டில் அது 8132 ஆக குறைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை மீண்டும் சரிந்துள்ளது.
தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறைந்து வருவது எதிர்காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் கடும் சரிவை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.