அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக-வை பொறுத்தமட்டில் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் மாணவ சமுதாயத்தின் ஒளிவிளக்காகத் திகழும் ஆசிரியப் பெருமக்களின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என, கல்வியின் இன்றியமையாமை உணர்ந்து அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு புதிய திட்டங்களை கல்வி நிலையங்களில் நடைமுறைப்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
இந்த உலகில், தன்னைவிட தன்னிடம் கற்றவர் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிற ஒரே இனம் ‘அர்பணிப்புமிக்க ஆசிரியர்’ இனம் மட்டுமே. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப்பின் பெற்றோர்களின் கவனம் அரசுப்பள்ளிகளில் பெரிதும் குவிந்து வருகிறது. இதை ஆசிரியர்களாகிய நீங்கள் இன்னும் வலுப்படுத்தவேண்டும். அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் – குறிப்பாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்த வேண்டும்.
மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அந்த உன்னதமான பணியை நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணுக்கே உள்ள உணர்வுடன் நிறைவேற்றிக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. நிதிநிலை அறிக்கையில், 2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கென தமிழ்நாடு அரசு ரூ.32 ஆயிரத்து 599 கோடி ஒதுக்கியுள்ளது. தனி ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை இதுவாகும்.
இருப்பினும், நாட்டில் உள்ள பள்ளிகளையும் கடந்த 10 ஆண்டுகளில் படிந்துபோன இருளையும் எண்ணிப்பார்க்கின்றபோது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நாம் மேலும் சில முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும். முன்னாள் மாணவர் சங்கங்களோடு இணைந்தும் நிறுவனங்களின் சமூகப்பொறுப்புத் திட்டத்தின்கீழும் நிதி திரட்டி பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அதை நிர்வகிக்கும் குழுக்களில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலரைச் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர் ‘வீடுதேடிக் கல்வி வழங்குதல்’ என்ற கொள்கையோடு மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள். இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரி செய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது. உங்களைப் போன்ற ஆசிரியர் சமூகம் இவ்வியக்கத்தை முன்னின்று வழிநடத்தித் தரவேண்டும் என்று முதலமைச்சர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் இப்போது, 4ஆவது தொழிற்புரட்சிக் காலத்தில் இருக்கிறோம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதற்கேற்ப, நமது உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள் மூலம் கல்வி வழங்கப்படவேண்டும். இவற்றையெல்லாம், நாட்டின் கடைக்கோடி மாணவனுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய பெரும் பொறுப்பு ஆசிரியர் பெருமக்களின் கடமை என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.