தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரொனோ பரவல் அதிகரித்ததால் மூடப்பட்ட பள்ளிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட உள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பள்ளிக்கு வருவார்கள்.
இந்நிலையில், தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் பெற்றோர்கள் தடுப்பூசி போடுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்படுவதாகவும், ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய இருப்பதாகவும் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதி இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை அமைச்சரின் இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.