சென்னை: எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது, தமிழக சட்டசபையில் 19.07.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை 2017-2018 முதல் ரூ.2 கோடி 50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்த தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது. உயர்த்தப்பட்ட ரூ.50 லட்சத்தில் ரூ.40 லட்சத்தை வரையறுக்கப்பட்ட கூறுக்காகவும், ரூ.10 லட்சத்தை வரையறுக்கப்படாத கூறு நிதிக்காகவும் செலவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் எம்எல்ஏக்களுக்கான சம்பளத்தை இருமடங்காக உயர்த்தினார். இந்நிலையில் எம்எல்ஏக்களின் தொகுதி நிதியும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.