தகவல் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து செயல்படும் அமைச்சர் எம்.மணிகண்டன் தகவல் | தகவல் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து செயல்படும் என்று அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- இணைந்து செயல்பட தமிழக அரசின் சார்பாக என்னை கூகுள் நிறுவனத்தின் இந்தியா தலைமை நிர்வாகி சேத்தன் கிருஷ்ணசாமியும், துணை மேலாளர் அமான் ஜெயினும் சந்தித்துப் பேசினர். கூகுள் நிறுவனத்தோடு தமிழக அரசு எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், தமிழகத்திற்கு எந்தவிதமான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை கொண்டு வரமுடியும், இளைஞர்களுக்கு எவ்வாறெல்லாம் வேலைவாய்ப்பை பெற்றுத்தர முடியும் என்பது போன்ற அம்சங்களை விவாதித்தோம். தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை தருவதாக எங்களிடம் தெரிவித்தனர். 6 மாவட்டங்கள் கூகுள் நிறுவனத்தில் இருந்து தமிழகத்திற்கு கிளவுட் கிரிடிட் என்ற தொழில்நுட்பத்தை புதிய தொழில்முனைவோருக்கு இலவசமாக செய்துதருவதாக தெரிவித்துள்ளனர். 6 மாவட்டங்களில் 4 ஆயிரம் கிராமங்களில் இலவசமாக இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தி, பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். மாணவர்களுக்கும் இன்டர்நெட் தொடர்பான திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் எங்கெல்லாம் இலவச ‘வைபை’ வசதியை நிறுவலாம் என்று கேட்டுள்ளார்கள். தமிழகத்தில் உள்ள கலாசார, பண்பாட்டு இடங்களுக்காக ‘இன்டர்நெட் வெர்சுவல் இன்ஸ்டிடியூட்’ கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கூகுள் மையம் கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சையை சந்திக்க முதல்-அமைச்சர் உள்பட அனைவரும் ஆர்வமாக உள்ளோம். தமிழகத்திலும் கூகுள் மையம் ஒன்று அமைக்க கேட்டுள்ளோம். பேரிடர் காலங்களில் சென்னையில் தகவல்தொடர்பு கிடைப்பதற்காக கூகுள் பலூனை வானில் நிறுத்தும் திட்டத்துக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். தமிழகம் முழுவதிலும் 39 கிராமங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.20 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், வைபை வசதி உள்ளிட்டவை கூகுள் வழியாக செய்யமுடியுமா என்று கேட்டிருக்கிறோம். இ-சேவை மையத்துக்கு வராமலேயே சான்றிதழ்களை பெறுவதற்கான செல்போன் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.