பி.இ., பி.டெக் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றியமைத்துள்ளது உயர்கல்வித்துறை. இதில், பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த பிரிவைச் சார்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டும், பட்டியலின மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் உயர்த்தப்பட்டும் உள்ளது. பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் தகுதி மதிப்பெண் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, பொதுப் பிரிவினர் 50 சதவிகிதத்துக்குக் கூடுதலான மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45 சதவிகிதத்தையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 40 சதவிகித மதிப்பெண்ணையும், பட்டியலினத்தவர் 35 சதவிகித மதிப்பெண்ணையும் பெற்றிருந்தால் போதும் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதனால், குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் போதும் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பாக இருந்தது. இதை முடிவுக்குக் கொண்டு வரும்வகையில், உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில், `அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி, அடுத்த கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி மதிப்பெண் மாற்றியமைக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் குறைந்த பட்ச மதிப்பெண் 35 சதவிகிதத்திலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாகவும், இதரப் பிரிவினருக்கு அனைவருக்கும் 40 சதவிகிதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், `அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேரும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறையும்’ என்று எச்சரிக்கை செய்கின்றனர் கல்வியாளர்கள்.