தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்களை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள நாமக்கல் தெற்கு அரசுப்பள்ளியின் 125-வது ஆண்டுவிழா இன்று (17.2.2018) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “தனியார் பள்ளிகள் அதிகமானதால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டவும், லாரி தொழில் முதன்மையாக உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு அசோக் லைலேண்டைப் போல் மேலும் ஒரு பயிற்சிப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.