ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.பரிமளம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, பிளஸ்–2 மதிப்பெண்ணுடன், பிளஸ்–1 மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தமிழக அரசு 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
இந்த உத்தரவால் பிளஸ்–1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே கல்லூரி சேர்க்கைக்கு பிளஸ்–1 மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் ‘இதுதொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.