ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. வேலுார் தேர்தல் காரணமாக அந்த மாவட்ட மாறுதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் வழங்கப்படும்.
இதில் குறைந்தபட்சம் ஓராண்டு ஒரே இடத்தில் பணி முடித்தவர்கள் பங்கேற்று இடமாறுதல் பெறலாம்.இந்த ஆண்டுக்கான இடமாறுதல் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி ஒரு இடத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே இடமாறுதல் பெற முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரத்துக்கு முன்பே மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று துவங்க உள்ளது. முதலில் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
பின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் அதன்பின் அந்தந்த மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்படும்.இறுதியாக இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
வேலுார் லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் அம்மாவட்டத்திற்கு மட்டும் இடமாறுதல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துஉள்ளார்.