தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள், 3 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஒரு திருநங்கை உட்பட, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்களும் அடங்குவர். கடந்த மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. திட்டமிட்டப்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில், பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்துள்ள செல்ஃபோன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று, அரசு தேர்வுத்துறை இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய தளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.
இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டுள்ள நிலையில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.