தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரி வளாகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மாணவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, ஜாதி, மத மற்றும் இன ரீதியான போராட்டங்களை, அவ்வப்போது நடத்துகின்றனர்.
இதனால், மாணவர்கள் மத்தியில், மோதல் ஏற்படுவதுடன், சமூக நல்லிணக்கம் கெடுவதாக, உயர்கல்வித்துறைக்கு கடிதங்கள் வந்துள்ளன.
சில தினங்களுக்கு முன், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த, ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில், சென்னை பல்கலையில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில்போராட்டங்கள் நடத்த தடை விதிக்கும்படி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைகள், கல்லுாரி வளாகங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டம்,போராட்டம் போன்ற போராட்டங்களுக்கான தடை, நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலை வளாகங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.