குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில், தலா 45 மதிப்பெண்களுக்கு, இத்தேர்வுநடக்கும். இதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்ற மாணவர்களுக்கு, ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்கொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.கோவை மாவட்டத்தில், கடந்த அக்., 5ம் தேதி, குறைதீர் கற்றல் தேர்வு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தது. இதில், 14 ஆயிரத்து 393 மாணவர்கள் பங்கேற்றனர்.மூன்று பாடங்களிலும், குறைவான மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு, பிரிட்ஜ் கோர்ஸ் மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென, பிரத்யேக பயிற்சி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணிகள் நடக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’ஒன்பதாம் வகுப்புக்கு நடந்த, கற்றல் குறைதீர் தேர்வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு பயிற்சி புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை பள்ளிகளுக்கு அனுப்பி, வரும் வாரத்தில் இருந்து பயிற்சிகள் அளிக்கப்படும்’ என்றனர்