டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருச்செந்தூர் அறிவியல் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்கள் பொதுவாக மருத்துவம், ஆட்சிப் பணி, பொறியியல், வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட பாடத் திட்டங்களையே பெரும்பாலும் பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இது போன்றுள்ள 246 பாடத் திட்டங்களையும் பயின்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். மேலும் தற்போதுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 483 கோடியில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.பொதுத் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பும் முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டுடன், மாணவர்களின் ஆதார் எண், முகவரி, ரத்த வகை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் போது, காப்பீடுத் திட்டத்தின் மூலம் 48 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும். அது போல வரும் டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013இல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியத்திலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் செங்கோட்டையன்.