பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர்கள்கள் பள்ளிகளிடம் அனுமதி கேட்டு நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை 75% அளவு செலுத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பலரும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளின் கட்டண வசூல் தொடப்ரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வருமானம் பாதிக்காத பெற்றோர்களிடம் இருந்து 85 சதவீத கட்டணத்தையும் வேலைவாய்ப்பை இழந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 75 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரது பிள்ளைகளிடமிருந்து 85 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பை நடத்தி இருந்தால் ஆறு தவணைகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை அவகாசம் அளித்து வசூலித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரானா காலகட்டத்தில் பொருளாதார இழப்பை சந்தித்த பெற்றோர்கள்கள் பள்ளிகளிடம் அனுமதி கேட்டு நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை 75% அளவு செலுத்தலாம் என்றும் அவ்வாறு அனுமதி கேட்பவர்களுக்கு தனியார் பள்ளிகள் அனுமதி அளித்து ஆறு தவணைகளில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கூறியுள்ளார். 75 சதவீத கல்வி கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்கு முன்னர் அல்லது அந்த தேதியில் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கட்டணம் உள்ளிட்ட எவ்வித காரணங்களையும் கூறி மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது என்றும் ஆன்-லைன் வழிக் கல்வி வகுப்பிலிருந்து புறக்கணிக்க கூடாது என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் நான்கு வாரத்திற்குள் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.