பிளஸ்1 இயற்பியல் மற்றும் பொருளாதார தேர்வுகள் மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தரமான கேள்வித்தாள் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று இயற்பியல், பொருளாதாரத்தில் தேர்வுகள் நடந்தது.
இயற்பியல் தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் எளியைமாக இருந்ததாகவும், ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் யோசித்து பதில் அளிக்கும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை இயற்பியல் ஆசிரியை மகேஸ்வரி கூறியதாவது: பிளஸ் 1 வகுப்பு இயற்பியல் பாடபுத்தகத்தில் 11 சேப்டர்களிலும் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஒரு மதிப்பெண் பகுதியில் 7 கேள்விகள், புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. 8 கேள்விகள் பாடபுத்தகத்தின் உள்பகுதியில் இருந்து வந்துள்ளது. 3 கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்படும் மாடலில் இடம் பெற்றுள்ளது. 5 மதிப்பெண் பகுதியில் மாணவர்கள் அதிகம் எதிர்பார்த்த கேள்விகள் வந்துள்ளது. மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில், தரமான கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில கேள்விகளை மட்டும் படித்து தேர்வு எழுதும் முறை மாறி வருகிறது. இதற்கேற்ப மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும். பாடபுத்தகத்தை முழுமையாக படித்த மாணவர்கள், 20 ஒரு மதிப்பெண் கேள்விக்கும் எளிதாக விடை எழுதமுடியும். இவ்வாறு ஆசிரியை மகேஸ்வரி கூறினார். முதுகலை பொருளாதார ஆசிரியை கவுரி கூறுகையில், ‘சிஏ பவுண்டேசன் தேர்வில் கேட்கப்படுவது போல பிளஸ்1 தேர்வில் கேள்விகள் வந்துள்ளது. 20 ஒரு மதிப்பெண் கேள்விகளில் 9 கேள்விகள் மாணவர்களின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உயர்கல்வியில் எந்த மாதிரி தேர்வை எதிர்நோக்குவார்கள் என்ற அடிப்படையில், தரமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் செண்டம் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.
அதே நேரம் வரும் கல்வியாண்டில் பொருளாதார பாடத்தின் மீது, மாணவர்களின் ஈர்ப்பு அதிகமாகும்,’ என்றார். ஒரு மதிப்பெண் கேள்வியில் பிழை பிளஸ்1 இயற்பியல் தேர்வில் தமிழ் மீடியத்தில் கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் பகுதியில், முதல் கேள்வியில் திசைவேகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் இடப்பெயர்ச்சி என இருக்கவேண்டும். திசைவேகம் என கேள்வி கேட்கப்பட்டுள்ளதால், அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால், ஆங்கிலத்தில் அந்த கேள்வி சரியாக கேட்கப்பட்டுள்ளதாக இயற்பியல் ஆசிரியர்கள் கூறினர்.