பிளஸ் 2 தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியதை அடுத்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.மேலும் ப்ளு பிரிண்ட் இல்லாத புதிய முறை வினாத்தாள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதல் தேர்வாக நடைபெற்ற தமிழ்ப் பாட வினாத்தாள் கூறித்து சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்.ராஜேஸ்வரி, டி.செவ்வந்தி, கே.ரமேஷ் உள்ளிட்டோர் கூறியது: பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் முதலாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்ப் பாடத்தில் உரைநடை, செய்யுள், இலக்கணம், மனப்பாடப் பகுதி, துணைப்பாடம் என அனைத்தும் ஒரே வினாத்தாளில் இடம்பெறுவதால் அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வினாத்தாளைப் பார்த்ததும் அந்த அச்சம் நீங்கியது. அந்தளவுக்கு அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தன.வினாத்தாள் 1, 2,3, 5, 6 மதிப்பெண்களில் எட்டு பிரிவுகளில் மொத்தம் 44 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் சிலவற்றை தவிர அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதில் பதிலளிக்க முடிந்தது. ஆறு மதிப்பெண் பகுதியில் கேள்விகள் எளிமையாக இருந்தபோதும் அதற்கான பதில்கள் 4 முதல் ஐந்து பத்திகளில் எழுதவேண்டியிருந்தது. கூடுதலாக 15 நிமிஷங்கள் அவகாசம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றனர்.
ஆசிரியர் கருத்து: ப்ளு பிரிண்ட் இல்லாமல் கேட்கப்பட்ட தமிழ் வினாத்தாள் குறித்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுநிலை தமிழாசிரியர் ஜெயினுலாபுதீன் கூறியது: தமிழ் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் பாடப்பகுதியின் உள்பகுதியிலிருந்து சில வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் முழு மதிப்பெண் எடுப்பது சற்று கடினம். வழக்கமாக திருக்குறள் பகுதியிலிருந்து ஒரு நெடுவினா (6 மதிப்பெண்) கண்டிப்பாக இடம் பெறும். ஆனால் இந்த வினாத்தாளில் அது இடம்பெறவில்லை. இருப்பினும் இலக்கணம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் மாணவர்கள் நன்கு எதிர்பார்த்த வினாக்களே இடம்பெற்றிருந்தன. சராசரி மாணவர்கள் கூட 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். புதிய வினாத்தாள் முறை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என்றார்.அமைச்சர் ஆய்வு: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென் னை துரைப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
புதுவையில் 15,888 பேர் எழுதினர்புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை 15,888 மாணவ, மாணவிகள் எழுதினர். நாளில் மொழித் தாள் தேர்வு நடைபெற்றது.புதுச்சேரி பகுதியில் 44 அரசுப் பள்ளிகள், 87 தனியார் பள்ளிகள், காரைக்காலில் 10 அரசுப் பள்ளிகள், 13 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,450 தனித் தேர்வர்கள் உள்பட 15,888 பேர் தேர்வை எழுதினர். புதுச்சேரியில் 33, காரைக்காலில் 9 எனமொத்தம் 42 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.
புதுச்சேரியில் 13,223 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் தேர்வை 12,633 பேர் மட்டுமே எழுதினர். 590 பேர் தேர்வெழுத வரவில்லை. இதேபோல, காரைக்காலில் 2,664 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 2,503 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தனர். 161 பேர் தேர்வெழுத வரவில்லை.பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு தனித் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பெண் முறையிலான வினாத் தாள், தேர்வு நேரம் வழங்கப்பட்டன.
தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.வினா, விடைத் தாள்கள் உள்ளிட்ட தேர்வு சாதனங்களை மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலர்களும், ஆயுதம் ஏந்திய காவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்களுடன், பறக்கும் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தேர்வுமையங்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.