பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்- மாணவிகளுக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் 38,501 மாணவர், மாணவிகள் தேர்வு எழுதியதில், 36, 501 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.41சதவீத தேர்ச்சியாகும். அனைத்து வருவாய் மாவட்டங்கள் வாரியாக மேல்நிலைப் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் இணையதளத்தின் மூலம் பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ்களை திங்கள்கிழமை முதல் விநியோகிக்கத் தொடங்கினர். தற்போது கோடை விடுமுறை தினமானதால் மாணவர்கள் குறைந்தளவே வந்து மதிப்பெண் சான்றிதழ் பெற்றுச் சென்றனர். இருப்பினும் செவ்வாய்க்கிழமை அதிகளவிலான மாணவர் – மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர்.