பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் குறித்த திருத்தப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இம்மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டது. அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்கள்படி, மாணவர் வருகைப் பதிவேடு, கல்வி இணைச் செயல்பாடுகள் போன்றவற்றில் வழங்கப்பட்டு வந்த அதிக மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அகமதிப்பீட்டுக்கு தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து 10 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம்: மாணவர் வருகைப் பதிவேடு – 2 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகைக்கு 2 மதிப்பெண்கள், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1மதிப்பெண் வழங்கப்படும்.
உள்நிலைத் தேர்வுகள் – 4 மதிப்பெண்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் நான்கு மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் – 2 மதிப்பெண்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று அடிப்படையில் மதிப்பெண்கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள் -2 மதிப்பெண்; மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், தேசிய மாணவர் படை, விளையாட்டுச் செயல்பாடுகள் என ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் 33 செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளதை கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கலாம்.
தொழிற்கல்வி செய்முறை பாடத்துக்கான அக மதிப்பீடு: மொத்தம் 25 மதிப்பெண்கள்மாணவர் வருகைப் பதிவு – 5 மதிப்பெண்கள்; 80 சதவீதத்துக்கு மேல் வருகை- 5 மதிப்பெண்கள்; 75 முதல் 80 சதவீதம் வரை- 3 மதிப்பெண்கள்.உள்நிலைத் தேர்வுகள்- 10 மதிப்பெண்கள்; சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 10 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம்- 5 மதிப்பெண்கள்; இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடலாம். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். கல்வி இணைச் செயல்பாடுகள்- 5 மதிப்பெண்கள்; ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஏதேனும் மூன்று மட்டும். அவற்றுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.