‘மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி கணக்கை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்,” என, மண்டல வைப்புநிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது: வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன் பணம், கணக்கை முடிக்க விரும்பும் சந்தாதாரர்கள் தங்கள் கே.ஒய்.சி., விவரங்களை நிறுவனம் மூலம் ஒப்புதல் அளித்திருந்தால் தாங்களே ஆன்லைனில் படிவமாக சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான சந்தாதாரர்கள் தங்கள் ஆதார், வங்கி கணக்கை வைப்பு நிதி கணக்கு எண்ணுடன் (யு.ஏ.என்) இணைக்கவில்லை. இதை இணைக்க www.epfindia.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று யு.ஏ.என்.,னை ‘ஆக்டிவேட்’ செய்யலாம்.ஆதார் விவரம் இவ்வலுவலக சந்தாதாரர் விவரங்களுடன் பொருந்தி இருக்க வேண்டும். சந்தாதாரர்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நிறுவனத்திலும் போதுமான ஏற்பாடு செய்துள்ளோம். டிச., 10க்குள் பணியாளர்களின் ஆதார் விவரங்களை இணைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் ‘யூமாங்’ ஆப் பதிவிறக்கம் செய்து வைப்புநிதி சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.
Related Stories
March 3, 2022
August 4, 2021