என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? கல்லூரி முதல்வர்கள் விளக்கம் | என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? என என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என்று மொத்தத்தில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வை 1 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுகளில் மொத்தம் 39 ஆயிரத்து 142 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 34.55 ஆகும். இந்த தேர்வு முடிவுகள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இப்போதுதான் இவ்வளவு குறைந்துள்ளது. இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் ஜி.வி.உமா மற்றும் அதிகாரிகள் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர்களிடமும் காரணம் கேட்டனர். அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:- மாணவர்களுக்கு பி.இ. முதல் செமஸ்டர் தேர்வில் பிளஸ்-1 பாடத்தில் உள்ள கேள்விகளும் கேட்கப்படுகின்றன. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிளஸ்-1 ஆசிரியர்களும் பாடத்தை சரியாக சொல்லி கொடுப்பதில்லை. மாணவர்களும் ஆழமாக படிப்பதில்லை. பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பலர் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கிறார்கள். இது திடீர் திருப்பம். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு எண்ணம் இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய செமஸ்டர் தேர்வில் வினாக்கள் கேட்கும் முறை, தேர்வுமுறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. நீட் தேர்வு முடிவு வெளியிடும் முன்பே தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவு தெரியாமல் என்ஜினீயரிங் சேர்ந்த மாணவர்கள், பிளஸ்-2 வகுப்பில் உயிரியல் பாடத்தை நன்றாக படித்து இருப்பார்கள். அவர்களில் பலருக்கு கணித பாடம் அவ்வளவாக தெரியாது. இந்த காரணங்களால் என்ஜினீயரிங் முதல் செமஸ்டரில் தேர்ச்சி சதவீதம் குறைந்து இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.