சாலை விபத்தை குறைப்பதற்காக செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்று
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதற்கு கனரக வாகன சங்கம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இருசக்கர வாகனம் முதல் கனரக கண்டெய்னர் லாரி வரை உள்ள அனைத்து வாகன ஓட்டுநரும் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது கட்டாயம் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது. போக்குவரத்து துறையுடன் போலீசாரும் இணைந்து இந்த பணியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போக்கு வரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருசக்கர வாகன உற்பத்தியில் 4-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் ஆண்டு 1½லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். பல்வேறு நோயால் உயிர் இழப்பதைவிட சாலை விபத்தால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்து உயிர் பலியில் முதலிடம் வகிக்கிறது. வருடத்திற்கு 15 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாகிறார்கள்.
சாலை விபத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிரைவிங் லைசென்சு இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு செய்ய முடியும் என்ற உத்தரவு சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில்அதனை தொடர்ந்து வாகனத்தில் செல்லும் போது வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்ற மற்றொரு புதிய திட்டம் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டி.வி.எஸ். எக்செல் இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை உள்ள அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
ஓட்டுனர் உரிமம் இல்லமல் வாகனங்களை ஓட்டிச் சென்று போலீசாரிடம் பிடிபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவரது லைசென்சு 6 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். 4 மற்றும் கனரக வாகனங்களாக இருந்தால் அவற்றின் பர்மிட் சஸ்பெண்டு செய்யப்படும்.
பொதுமக்கள் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வாகன ஓட்டிகள் மனதிலும் உருவாக வேண்டும். இரு சக்கரத்தில் செல்பவர்கள் தான் சாலை விபத்தில் சிக்கி அதிகளவு பலியாகிறார்கள். அதனால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு கொண்டு வரும் இந்த புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் சாலை விபத்தை குறைத்து உயிர் பலியை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.