தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்யலாம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் கரோனா தொற்றின் காரணமாக 2021 ஏப்ரல் 24 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் முடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2021-22 ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்றும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகின்றன.
தற்பொழுது நிலவி வரும் கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ந் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம்.
மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.