மாணவர்களுக்கான, ‘ஆன்லைன்’ வகுப்புகள் குறித்த வழக்கு பற்றி, பெற்றோர் – ஆசிரியர் சங்கம், கல்வி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பத்திரிகைகளில் வெளியிடும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைசென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனு:பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன், மடிக்கணினியை, மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆபாச இணையதளங்களால், கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாமல், ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கறிஞர் விமல் மோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘அதனால், ஆறு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே, வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும்’ என, கோரியிருந்தார்.இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக, விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழிமுறைஇதற்கு, மனுதாரர்கள் தரப்பில், ‘மாநில அரசு பிறப்பித்த வழிமுறைகளை, நடைமுறையில் பின்பற்ற இயலாது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை’ என, தெரிவிக்கப்பட்டது.வழக்கில், தங்களையும் இணைக்க கோரி, கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதிகள் ஏற்றனர். ஆன்லைன் வகுப்புகளில், அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் வகையில், ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான வழக்கு பற்றி, பெற்றோர் – ஆசிரியர் சங்கங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தெரியும் வகையில், பத்திரிகைககளில் விரிவாக வெளியிட, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவர்கள் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், அவர்கள் கருத்து தெரிவிக்கலாம் எனக்கூறி, விசாரணையை, வரும், 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.