‘ஒரே தேசம் – ஒரே பாடத் திட்டம்’ கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் | நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அஷ்வினி உபாத்யாயா. வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய மனைவி நீடா உபாத்யாயா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டம் 21ஏ பிரிவின் நோக்கத்தை அடைய, ஒரே தேசம் – ஒரே கல்வி வாரியம் என்பதை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ என்று கல்வி வாரியங்கள் செயல்படுகின்றன. அத்துடன் மாநிலங்களிலும் தனித்தனியாக கல்வி வாரியங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்குப் பதிலாக நாடு முழுவதும் ஏழை, பணக்காரர்களின் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே பாடத் திட்டம் ஒரே கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், கொள்கைகள் போன்றவை கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்தப் பாடத்திட்டத்தை 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். தற்போதுள்ள கல்வி முறை எல்லா குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பை அளிக்கவில்லை. இவ்வாறு மனுவில் நீடா கூறியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் நீடா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாஜன் பூவய்யா வாதிடும் போது, ”நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்தினால், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்றார். அதன் பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ”நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் சாத்தியமில்லை. இந்த மனு விசாரணைக்கு ஏற்றது இல்லை. இதுபோன்ற மனுக்களை இந்த நீதிமன்றம் ஊக்குவிக்காது” என்று கூறி தள்ளுபடி செய்தனர்.