தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் ரூ.141.94 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையம், கடலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.54.61 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், கோவை, கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ரூ.86.63 கோடியில் 57 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.142.94 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்.
மேலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் பணிக்கு 62 உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணிநியமன உத்தரவுகளை அளிக்கும் வகையில் ஏழு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்