‘நீட்’ தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது; வரும், 30ம் தேதி பதிவு முடிகிறது. அதற்குள், நீட் தேர்வுக்கான பதிவுகளை முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.