மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு திறந்தநிலை கல்வியில் பிளஸ் 2 படிப்பவரும் விண்ணப்பிக்கலாம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிபிஎஸ்இ அறிவிப்பு | திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) வரும் மே 6-ம் தேதி நடத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மருக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால், அவற்றுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. வரும் 9-ம் தேதி கடைசி நாள் என்பதால் நாடு முழுவதும் இருந்து பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (NIOS) மற்றும் மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ்2 படிப்பவர்கள், தனித்தேர்வராக படிப்பவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. பள்ளிக்குச் செல்லாமல் படிக்கும் அவர்களுக்கு செய்முறை தேர்வு இல்லாததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இந்த திடீர் அறிவிப்பால், நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 2மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியது. மாணவர்கள் தரப்பிலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மாணவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ நீட் தேர்வுகள் இயக்குநர் கே.கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இதனால், அந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் பி.ரவி கூறியபோது, ”மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் செயல்படுகிறது. என்ஐஓஎஸ் என்பது சிபிஎஸ்இக்கு இணையான மத்திய பாடத்திட்டம். இதில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
Related Stories
September 20, 2023
April 16, 2023