‘நீட்’ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | நீட் தேர்வு உள்ளிட்ட எந்த போட்டிதேர்வு களையும் மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. அதுபோல பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்து படிக்க மத்திய அரசு எந்த போட்டி தேர்வுகளை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சி மையங் கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக் கப்பட்டு உள்ளன. கே.ஏ.செங்கோட்டையன் இந்த பயிற்சி மைய தொடக்க விழா, பள்ளிக்கல்வித்துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடக்கவிழா, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஆகியவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு இணையதளத்தையும், பயிற்சி மையங்களையும் தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம் ( www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளை அறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு, வரக்கூடிய போட்டிதேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 3 ஆயிரம் ஆசிரியர்கள் இதற்காக ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் , அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகநாதன், இயக்குனர்கள் இளங்கோவன், கண்ணப்பன், ராமேஸ்வர முருகன், கார்மேகம், கருப்பசாமி மற்றும் இணை இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
Related Stories
December 2, 2024