தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
தத்தெடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 23) அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது. தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் தத்தெடுக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியை மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக அரசு பல்வேறு மாற்றங்களைப் பள்ளி கல்வித் துறை சார்பில் செய்துவருகிறது. 500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் 318 அரசுப் பள்ளிகளில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.