இந்திய வனப்பணி (IFS) தேர்வு முடிவுகள் வெளியீடு | தமிழகத்தில் 14 பேர் தேர்ச்சி கார்த்திகேயனி இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஎப்எஸ் என அழைக்கப்படும் இந்திய வன பணிக்கான முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 13 ம் தேதி வரை நடந்தது. எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஜனவரி 3-ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது . இந்த நிலையில், இறுதி முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று இரவு வெளியிட்டது. அகில இந்திய அளவில் மொத்தம் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயனி என்ற மாணவி இந்திய அளவில் 12-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். அவர் தனது 2-வது முயற்சியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வனப்பணி தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.