கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 22-ந் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது