நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை. தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, “முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.