‘நீட் நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை, எம்.சி.ஐ., எனப்படும்இந்திய மருத்துவக் கவுன்சில்தான் நிர்ணயிக்கிறது’ என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவக் கல்விக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு, வரும், மே, 6ல் நடக்க உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மார்ச் 9, கடைசி நாள். இந்நிலையில், ‘தேசிய மற்றும் மாநில திறந்தநிலைப் பள்ளிகளில் படித்தோர் மற்றும் உயிரியல் பாடத்தை கூடுதல் பாடமாகபடித்தோர், நீட் தேர்வு எழுத முடியாது’ என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பல்வேறு கேள்விகள், விளக்கங்கள் கோரப்பட்டு வருவதால், சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீட் நுழைவுத் தேர்வை மட்டுமே நாங்கள் நடத்துகிறோம். அதற்கான தகுதி உள்ளிட்டவற்றை, இந்திய மருத்துவக் கவுன்சிலே நிர்ணயிக்கிறது. நுழைவுத் தேர்வுக்கான தகுதி தொடர்பாக சந்தேகம் இருந்தால், எம்.சி.ஐ.,யிடம் கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘கடந்தாண்டு, 107 நகரங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது; இந்தாண்டு, 150 நகரங்களில் நடத்தப்படும்’ என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், சமூகதளத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதலாக, இரண்டு மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.