அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக
அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதிக்கும் அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பரகத் அலிகான். இவர் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லா விடுமுறையில் 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி அளிக்கும் அரசாணையின் அடிப்படையில் துபாய் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தார்.
அனுமதி கிடைப்பதற்கு முன்பு வெளிநாட்டு வேலையில் சேர்ந்து பணிக்காலம் முடிந்து மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அனுமதி கிடைப்பதற்கு முன்பு பணியில் சேர்ந்தற்காக பரகத் அலிகானுக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 4 ஆண்டுகள் அவரது பெயர் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் துணை ஆட்சியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகள் சம்பளம் இல்லா விடுமுறையில் வெளிநாட்டில் வேலைபார்க்க அனுமதி வழங்கி தமிழக அரசின் பொதுத்துறை 20.5.1991-ல் அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்கள் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது, அரசு ஊழியர்களை 3 ஆண்டுகள் விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதி வழங்கி விட்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரசு பணியில் சேர அனுமதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
அரசு ஊழியர் ஒருவர் தாய் நாட்டிலும், வெளிநாட்டிலும் இரு வேலை பார்ப்பது எப்படி? என்பதை தீவிரமாக பார்க்க வேண்டும். இதனால் அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்கும் அரசாணையின் அடிப்படையில் எத்தனை பேர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்? இந்த அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.